Sunday, August 12, 2007

கேபிள் டிவிக்கு தனி நிறுவனம்-தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் கேபிள் டிவி தொழிலில் கோடி, கோடியாக வருவாய் வருகிறது. கேபிள் டிவி கட்டணங்கள் மாநிலம் முழுவதிலும் ஒரே சீராக இல்லை. அதை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட காரணங்களினாலும் அரசியல் கட்சிகளிடையே வலுத்துக் கொண்டே வந்தன. அதிலும் குறிப்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சற்று அழுத்தமாகவே செல்கின்ற இடங்களிலெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

இதுவரையிலும் அப்படியொரு கருத்தே இல்லை என்ற நிலையில் இருந்த தமிழக அரசு மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு, தயாநிதி மாறன் தி.மு.க.விலிருந்து ஒதுக்கப்பட்ட பிறகு யோசனை செய்து கேபிள் டிவியை அரசே நடத்தலாம் என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டது.

நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்தப் பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. கேபிள் டிவி தொழிலை மின்வாரியத்தின் மூலம் தமிழக அரசே நடத்தலாம் என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இதற்காக மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "தமிழக அரசு சார்பில் கேபிள் டிவி இணைப்புகள் வழங்குவதற்கென்று தனியே ஒரு நிறுவனம் அமைக்கப்படும். சென்னை நகரைப் பொறுத்தவரை, நடைமுறையில் உள்ள கேபிள் டிவியில் கட்டண சேவைகளைப் பார்க்கும் ஏற்பாட்டு முறையைச் செய்யும் எம்.எஸ்.ஓ.(பன்முக ஏற்பாட்டு முறை ஆபரேட்டர்) போல செயல்படும். தமிழகத்தின் பிற பகுதிகளில் கேபிள் டிவி ஆபரேட்டராக அந்நிறுவனமே செயல்படும். இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளப்படும்.." என்று கூறப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல முடிவு என்றே சொல்ல வேண்டும்.

0 comments: