Tuesday, April 22, 2008

இராமநாதபுரம் மாவட்டம்-சுற்றுலா கையேடு

இந்தியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு ஓரத்தில் அமைந்துள்ளது குட்டித் தீவு ராமேஸ்வரம்.

இந்துக்களின் ஆன்மீகத் தேடல் காசியில் தொடங்கி ராமேசுவரத்தில் முடிவதாக கூறுவார்கள். அந்த வகையில் ராமேசுவரத்திற்கு சென்று ஆன்மீக தரிசனம் மேற்கொள்வதை இந்துக்கள் புனித கடமையாக கொண்டுள்ளார்கள்.

இத்தகைய சிறப்புமிக்க ராமேஸ்வரத்திற்கு அப்பெயர் வந்ததற்கான காரணம் மிக சுவாரஸ்யமான ஒன்று.

ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை மீட்க வந்த ராமன், ராமேஸ்வரம் வழியாகத்தான் இலங்கைக்கு பயணமானார்.

இலங்கையில் சீதையை விட்டுவிட்டு அயோத்தி திரும்பும் வழியில் மீண்டும் ராமேஸ்வரம் வந்தார். ராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்க அங்கேயே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமன்.

ராமர் பாதம் பட்ட, கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்தக் குட்டித் தீவில் ஆன்மிக மனம் கமழும் பல கோவில்கள் அமைந்துள்ளன. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு வருகை தரும் வட இந்திய பக்தர்களின் எண்ணிக்கை மிக, மிக அதிகம்.

ராமநாதசுவாமி கோவில் ராமேஸ்வரம் தீவின் கிழக்குப் பகுதியில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள சுவாமி ராமநாதசுவாமி(சிவன்) என்றும், அம்மன் பர்வதவர்த்தினி(பார்வதி) என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இக்கோவிலின் கோபுரம் 38.4 மீட்டர் உயரம் கொண்டது. இக்கோவில் மூன்றாம் பிரகாரம் உலகப் பிரசித்தி பெற்றது. அதாவது இந்த பிரகாரத்தின் நான்கு வீதியிலும் சேர்த்து மொத்தம் 1,212 தூண்கள் உள்ளன. இந்த நான்கு வீதிகளையும் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஒரே மாதிரியாக இருப்பது தனிச்சிறப்பு.

ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் இங்குள்ள புனிதத் தீர்த்தங்களில் நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். ராமநாதசுவாமி கோவிலுக்குள் மட்டும் 22 தீர்த்தங்களும், கோவிலுக்கு வெளியே 31 தீர்த்தங்களும் அமைந்துள்ளன. ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு பலனைத் தருவதாக கூறுகிறார்கள்.

ராமநாதசுவாமி கோவில் முன்புறம் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடல் பகுதியே அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இங்கு கடல் அமைதியாகவே காணப்படுகிறது. இதில்தான் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் புனித நீராடுகிறார்கள். இவ்வாறு புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்க இந்த அக்னி தீர்த்த கடற்கரையில்தான் ராமன் வழிபாடு நடத்தினார் என்கிறது ராமாயண காவியம்.

கெந்தமாதன பர்வதம். இது ராமநாதசுவாமி கோவிலில் இருந்து வடக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ராமேஸ்வரம் தீவிலேயே மிக உயரமான பகுதி இதுவேயாகும். இங்கிருந்து பார்த்தால் ராமேஸ்வரத்தின் சுற்றுப் பகுதிகள் அனைத்தையும் காணலாம். இங்குள்ள இரண்டடுக்கு மண்டபத்தில் ராமர் பாதமானது ஒரு சக்கரத்தில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் இங்கும் வந்து செல்கிறார்கள்.

கோதண்டராம சுவாமி கோவில் ராமேஸ்வரத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ராவணன் தம்பி விபீஷணன் இந்த இடத்தில்தான் ராமனிடம் சரணடைந்ததாக வரலாறு கூறுகிறது. இந்தக் கோவிலில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமான் மற்றும் விபீஷணன் ஆகியோரின் சிலைகள் வழிபாடு செய்யப்படுகின்றன.

ஐந்துமுக ஆஞ்சநேயர் கோவில் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ளது.

1964-ல் தனுஷ்கோடியை புயல் தாக்கியபோது அங்கிருந்த கோவிலும் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரது சிலைகள் ஐந்து முக ஆஞ்சநேயர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்தக் கோவிலில்தான் தண்ணீரில் மிதக்கும் பவளப் பாறைகள் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை செல்ல ராமர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இந்தப் பாறைகளுக்கு இங்கு வழிபாடும் செய்கிறார்கள்.

இந்த மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்தை சேதுபதி மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அருமையான சித்திரங்களுடன் கூடிய ராமலிங்க விலாசம் இங்கு பார்க்க வேண்டிய இடம். தத்துவப் பாடல்கள் பல பாடியுள்ள தாயுமான சுவாமிகளின் நினைவுச் சின்னமும் இங்குதான் உள்ளது.

ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வடக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ளது தேவிப்பட்டினம். இங்கு கடலுக்குள் நவபாஷணம் என்கிற நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. இவற்றை ராமபிரானே பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. கிரக தோஷம் உள்ளவர்களுக்கு மகிழ்வளிக்கும் இத்தலத்தில் பாவங்கள் போக்கும் கிரியையைகளை பக்தர்கள் செய்கிறார்கள்.

திருஉத்திரகோசமங்கை ராமநாதபுரத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு நடராஜர் எழுந்தருளியுள்ள பழமை வாய்ந்த கோவில் ஒன்றும் உள்ளது. இங்கு இறைவன் மரகதக் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளார்.

ஏர்வாடி. ராமநாதபுரத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். முஸ்லீம்களின் பிரசித்தி பெற்ற தர்கா இங்குதான் உள்ளது. இந்தியா மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் இருந்தும் முஸ்லீம்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். ஆண்டு தோறும் டிசம்பர்-ஜனவரி மாதம் இங்கு நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா உலகப் புகழ் பெற்றது.

உப்பூர். ராமநாதபுரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உப்பூர். இங்குள்ள விநாயகர் கோவில் சிறப்பு பெற்றது. சீதையை மீட்க வந்த ராமன் இங்கு வழிபாடு செய்ததாகச் சொல்கிறார்கள்.

தனுஷ்கோடி. ராமேஸ்வரத்தில் இருந்து தென் கிழக்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடி 1964-ல் ஏற்பட்ட புயலில் சின்னாப்பின்னமானது. அந்தப் புயலில் எஞ்சிய உடைந்து போன கட்டிடங்களின் பாகங்கள் தனுஷ்கோடியின் மறக்க முடியாத சோகத்தை இன்றும் பறை சாற்றுகின்றன.

பாம்பன் பாலங்கள். ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு திரும்பி வரும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த பாம்பன் பாலம்.

பிரம்மாண்டமான இந்திய நிலப்பரப்பை குட்டித் தீவான ராமேஸ்வரத்துடன் இணைக்கும் கடல் பாலம்தான் இந்த பாம்பன் பாலம். இங்கு இரண்டு பாலங்கள் உள்ளன. ஒன்று ரயில் பாலம். மற்றொன்று சாலை பாலம்.
ரயில் பாலம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் 1913-ல் கட்டப்பட்டது. 2.6 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. சாலை பாலம் 1988-ல் கட்டி முடிக்கப்பட்டது. 2.34 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதற்கு இந்திராகாந்தி ரோடு பாலம் என்று பெயர். இந்தப் பாலங்களில் சென்றபடி அமைதியாக கடலின் அழகை ரசிப்பது அழகாகவும், அதே நேரம் திரில்லாகவும் இருக்கும்.

குருசடைத் தீவுகள். ராமேஸ்வரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கே உள்ள இந்தத் தீவுகளில் அழகிய பவளப் பாறைகளைக் காணலாம்.

ராமேஸ்வரம் தீவில் ஆன்மிகத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் நிறைய உள்ளன. இவற்றை முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றால் குறைந்தது 2 அல்லது 3 நாட்களாவது ஆகும். அதனால் ராமேஸ்வரத்தில் உள்ள உங்கள் வசதிக்கேற்ற லாட்ஜ்களில் தங்கி சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.

ராமேஸ்வரத்தில் சுற்றுலாவை முடித்துவிட்டு அங்கிருந்து ராமநாதபுரம் சென்று அந்தப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லலாம்.

இராமநாதபுரத்தில் இருந்து மதுரை விமான நிலையம் 173 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் வசதி உண்டு.

கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியல் வெப்பமும், குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வெப்பமும்.. குளிர்காலத்தில் அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் காணப்படும்.

இம்மாவட்டத்தின் சராசரி மழையளவு 50 சென்டிமீட்டர்.

சுற்றுலா பயணிகளே சென்று வருக..

Wednesday, October 17, 2007

எம்.பி.க்களின் வருகைப் பதிவேடு

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் பெரும்பாலான நாள் சபைக்கு வந்தவர்களில் முதலிடம் பெறுவோர் இளம் எம்.பி.க்கள்தான்.

இந்தாண்டு பட்ஜெட் கூட்டத் தொடர், பிப்ரவரி மாதம் 23-ம் தேதி ஆரம்பித்து, மே மாதம் 17-ம் தேதியோடு முடிவடைந்தது. மொத்தம் 32 அமர்வுகள் நடந்தன.

இதில் யார், யார் எத்தனை நாட்கள் வந்தனர் என்பதை இங்கே பாருங்கள்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் கோவிந்தா, 32 அமர்வுகளில் வெறும் 2 நாள்தான் சபைக்கு வந்திருக்கிறார்.

மேற்கு வங்க ஹால்தியா தொகுதியின் எம்.பி. லட்சுமண்சேத் 3 நாட்கள் வருகை புரிந்திருக்கிறார்.

கோவா காங்கிரஸ் எம்.பி. அலேமியோ சர்ச்சில், சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. நடிகை ஜெயப்ரதா இருவரும் 4 நாட்கள் வருகை தந்து உள்ளனர்.

பா.ஜ.க.வின் நம்பிக்கை நட்சத்திரம் நடிகர் தர்மேந்திரா 5 நாட்கள் வந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் 13 நாட்கள் வந்திருக்கின்றனர்.

காங்கிரஸின் இளம் எம்.பி.க்கள் ஜோதிராதித்யா சிந்தியா 25 நாட்கள், நவின் ஜிண்டால் 25 நாட்கள், சச்சின் பைலட் 24 நாட்கள், ஜதின் பிரசாதா 22 நாட்கள், மிலிண்ட் தியோரா 26 நாட்கள், தீபேந்தர் சிங் ஹோடா 24 நாட்கள்.. என்று இளைய சமுதாயத்தினர் தங்களது வருகையைப் பதிவு செய்துள்ளனர்.

அதி நாட்கள் வந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

முன்னாள் IPS அதிகாரி நிகில்குமார் 31 நாட்களும், அருணாகுமார் வந்தவள்ளி 30 நாட்கள், மதுசூதன் மிஸ்திரி 32 நாட்கள், பிரேன்சிங் எங்க்டி 30 நாட்கள், கிஷோர் சந்திரதேவ் 30 நாட்கள், கிருஷ்ணதிராத் 30 நாட்கள், ஏக்நாத் கெய்க்வாட் 31, தேவேந்திர பிரசாத் யாதவ் 32 நாட்கள், நியமன எம்.பி.யான பிரான்சிஸ் பான்தோம் 32 நாட்களுமாக வருகை புரிந்திருக்கிறார்கள்.

இதில் குறிப்பிடப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கையே 22-தான். 545 பேரில் மீதிப் பேர் எத்தனை நாட்கள் வந்தார்களோ..? யாருக்குத் தெரியும்..?

Tuesday, September 18, 2007

எல்லோருக்கும் பொதுவாய் நன்றி!!!

அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனை முறை நன்றியை வெளிப்படுத்துகிறோம்...?

யோசித்துப் பார்த்தால் நன்றியை கெட்ட வார்த்தையாக பாவித்து...

நன்றி மறந்த மனிதர்களாக மாறி...

நன்றியை ஒரு முறைக்கூட வெளிப்படுத்துவதில்லை என்று...

வெட்கப்பட்டு ஒப்புக் கொள்ள வேண்டும்...

இதனால் சகலமானவர்களுக்கும்...

சாலையில் வாகன போக்குவரத்தை சரிசெய்யும் மனிதருக்கும்...

தெருவில் குப்பைகளை கூட்டிப் பெருக்கும் மனிதருக்கும் ...

தபால் பட்டுவாடா செய்யும் மனிதருக்கும்...

காலையில் நாளிதழை வினியோகிக்கும் சிறுவனுக்கும்...

தேவையான நேரத்தில் தேவைப்படும் உதவியை செய்யும் நம் நண்பருக்கும்...

வீட்டு வேலைகளை செய்யும் பணியாளுக்கும்...

வாங்கிய கடனுக்கு குறைந்தபட்சம் வட்டியையாவது ஒழுங்காக கட்டும் மனிதருக்கும்...

அவ்வப்போது நம் பெற்றோருக்கும்...

கூச்சம் பார்க்காமல் நம் குழந்தைகளுக்கும்...

அன்றாடம் நம் மனைவிக்கும் என...

ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி நன்றி சொல்லப் பழகுவோம்.